கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: பள்ளிப்பட்டு பஜார் தெருவில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு அமைப்பு

ஆந்திர மாநிலத்தினர் வருகையை தடுக்கும் வகையில் பள்ளிப்பட்டு பஜார் தெருவில் உள்ள மூன்று திசைகளிலும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-05-13 06:06 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரம் நான்கு திசைகளிலும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் ஆந்திரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் தினசரி அத்தியாவசிய பொருட்களை வாங்க பள்ளிப்பட்டு நகருக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் பள்ளிப்பட்டு பஜார் தெரு எப்பொழுதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்த நிலையில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தற்போது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. அதேபோல் பள்ளிப்பட்டு தாலுகாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

குறிப்பாக பள்ளிப்பட்டு பஜார் தெருவில் கொரோனா தாக்குதலால் 2 பேர் இறந்து போனார்கள்.

தடுப்புகள் அமைப்பு

மேலும் இந்த தெருவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் பஜார் தெருவின் மூன்று திசைகளிலும் சவுக்கு கட்டைகளால் யாரும் உள்ளே செல்லாதபடி உள்ளே இருப்பவர்கள் வெளியே வராதபடி தடுப்புகளை அமைத்தனர்.

அப்போது, பள்ளிப்பட்டு தாசில்தார் கதிர்வேல், ஓய்வுதிய தாசில்தார் சண்முகவேல், பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, பள்ளிப்பட்டு வட்டார சுகாதார அலுவலர் தனஞ்ஜெயன், பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்