நெல்லையில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்
நெல்லையில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவதிப்பட்டு வருகின்றன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர். லேசான பாதிப்பு உள்ளவர்கள் தங்களது வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பிராணவாயு எனப்படும் ஆக்சிஜன் அளித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் அவர்கள் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும்போது ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இது அவர்களது உயிர்களை காக்கும் முயற்சி ஆகும். இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் வாயு கிடைப்பதில் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதேபோல் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நெல்லையில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தனியார் ஏஜென்சிகள் மூலம் புக்கிங் செய்தால் 2️ நாட்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது சிலிண்டர் புக்கிங் செய்தால் ஒரு வாரத்துக்கு பிறகு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவசர தேவைக்கு வெளியே சிலிண்டர் வாங்கினால் ஒரு 10 பவுண்டு எடை கொண்ட ஒரு ஆக்சிஜன் சிலிண்டருக்கு ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அதன் அசல் விலை ரூ.300 ஆகும். எனவே தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.