புதிய, பழைய பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கியது
விருதுநகரில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கியது;
விருதுநகர்,
விருதுநகரில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கியது
மாற்று ஏற்பாடு
விருதுநகர் மெயின் பஜாரில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இல்லாததால் கொரோனா நோய்பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் கடைகள் வைப்பதற்கும் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காய்கறி வாங்குவதற்கும் இயலாத நிலையில் நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டை மாற்று இடங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.
முதலில் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்த நிலையில் அதற்கு வியாபாரிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் இறுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் மார்க்கெட் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடங்கியது
இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் 80 வியாபாரிகளுக்கும், பழைய பஸ்நிலையத்தில் 50 வியாபாரிகளுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்த நிலையில் நேற்று இந்த 2 பஸ்நிலையங்களிலும் காய்கறி விற்பனை தொடங்கியது. ஓரளவு நோய்த்தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்நிலையில் பழைய பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட தொடங்கிய நிலையில் போலீசார் பஸ்நிலைய இரு வாசல்களிலும் முற்றிலுமாக தடுப்பு வேலியை வைத்திருந்தனர்.
இதனால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்கு பஸ்நிலையத்திற்குள் வருவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களும் நகராட்சி வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில் வாகனங்களில் வந்த பொதுமக்கள்காய்கறிகள் வாங்குவதற்கு வரும்போது வாகனங்களை உள்ளே அனுமதிக்காத நிலையில் அவர்கள் பஸ் நிலையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
கிருமி நாசினி
பாதுகாப்பு இல்லாத வகையில் வாகனங்கள் நிறுத்த தயங்கிய பொதுமக்கள் காய்கறி வாங்காமல் செல்லும் நிலையை காணமுடிந்தது.
ஒரு இடத்தில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு விட்ட நிலையில் ஏன் விசாலமான பஸ் நிலையத்திற்குள் வாகனங்களை அனுமதிக்காமல் போலீஸ் தடுப்பு வேலி வைத்தது என்று தெரியவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து போலீசாரிடம் உரிய அறிவுறுத்தல் வழங்கி பஸ்நிலைய நுழைவாயில்களில் உள்ள தடுப்புவேலிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காய்கறி விற்பனை நடைபெறுவதால் பஸ் நிலையத்தில் தினசரி 3 வேளைகள் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.