நெல்லை அருகே பயங்கரம்: டாஸ்மாக் பார் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை

நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் சரமாரியாக வெட்டிக் கொலை ெசய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-05-12 21:30 GMT
பேட்டை:
நெல்லை அருகே உள்ள பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி என்ற கணேச பாண்டியன் (வயது 54). இவர் பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். தினமும் இவர் பாரில் உள்ள தனது அறையில் தங்குவது வழக்கம். நேற்று காலையில் பாரில் உள்ள தனது அறையில் கணேச பாண்டியன் சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, அவரது அறையில் திபுதிபுவென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று புகுந்தது.

அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கணேச பாண்டியனை பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இதில் கணேச பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டது.  பின்னர் பாருக்கு ேவலைக்கு வந்தவர்கள் கணேச பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து உடனடியாக சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு பிரதீப், இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார் (சுத்தமல்லி), மேகா (பேட்டை) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கணேச பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.  அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேச பாண்டியனின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரின் ஆடு திருட்டு போனது. இதுகுறித்து பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் (30) என்பவர் மீது கணேச பாண்டியன், அவரது தம்பி துரை பாண்டியன், முருகன் ஆகியோர் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

இதை அறிந்த பாஸ்கர், கணேச பாண்டியனிடம் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற வலியுறுத்தினார். ஆனால், அவர் வழக்கை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கணேச பாண்டியனை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக தெரிகிறது. அதன்படி, நேற்று காலையில் டாஸ்மாக் பாரில் கணேச பாண்டியன் இருப்பதை அறிந்த பாஸ்கர், அவரது கூட்டாளிகள் 3 பேர் பாரில் நுழைந்து கணேச பாண்டியனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாஸ்கர், அவரது கூட்டாளிகளான பேட்டையை சேர்ந்த அப்துல் காதர் (30), விஜி (25), மைதீன் ஷேக் (25) ஆகிய 4 பேரையும் நேற்று மாலையில் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை அருகே டாஸ்மாக் பார் உரிமையாளர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்