சேலம் மாநகரில் முழு ஊரடங்கை மீறி கொரோனா ஆபத்தை உணராமல் சாலைகளில் திரியும் வாகன ஓட்டிகள் கட்டுப்பாடுகளை அதிகரிக்க கோரிக்கை
சேலம் மாநகரில் முழு ஊரடங்கை மீறி கொரோனா ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம்:
சேலம் மாநகரில் முழு ஊரடங்கை மீறி கொரோனா ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் மற்றும் மருந்து கடைகள், வேளாண் சார்ந்த பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் டீ கடை, காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியம் தவிர தேவையில்லாமல் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் கொரோனா ஆபத்தை உணராமலும், முழு ஊரடங்கை மதிக்காமலும் தினமும் சாலைகளில் வாகன ஓட்டிகள் சுற்றித்திரிந்து வருவதை காணமுடிகிறது.
கோரிக்கை
சேலம் கலெக்டர் அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, திருச்சி மெயின் ரோடு, சூரமங்கலம், 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மதியம் வரையிலும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருவதை காணமுடிகிறது. மதியம் 12 மணிக்கு பிறகும் பலர் தேவையின்றி சுற்றித்திரிகிறார்கள். போலீசாரும் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் தங்களது இஷ்டம் போல் சென்று வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாலும், சேலத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், கூடுதல் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
அபராதம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்த முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு சென்று வருவதாக கூறி சிலர் ஆபத்தை உணராமல் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சிலர் முக கவசம் அணியாமல் சென்று வருவதை காண முடிகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கட்டுப்பாடுகளை அதிகரித்து விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் போலீசார் சோதனை நடத்தி, அபராதம் விதிக்கிறார்கள். எனினும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி, அவர்கள் எங்கு சென்று வருகிறார்கள் என்று விசாரித்தாலே போதும். தேவையின்றி சுற்றித்திரிபவர்களின் கூட்டம் குறைந்து விடும் என்று கூறினர்.