சேலத்தில் தடையை மீறி செயல்பட்ட பூக்கடைகளுக்கு அபராதம்

சேலத்தில் தடையை மீறி செயல்பட்ட பூக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-12 20:21 GMT
சேலம்:
சேலத்தில் தடையை மீறி செயல்பட்ட பூக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
 கொரோனா
சேலம் மாநகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தினசரி சந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் உழவர் சந்தை மற்றும் பால் மார்க்கெட் பகுதியில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வேறு இடங்களுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.
சேலம் கடைவீதியில் சாலையோர பூக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் வியாபாரம் செய்வதற்கு மதியம் 12 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டம்
ஆனால் நேற்று சின்னக்கடை வீதியில் உள்ள பூக்கடைகளை சில வியாபாரிகள் திறந்து இருந்தனர். சாலையோர பூக்கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அங்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி வியாபாரிகள் தங்களது பூக்கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.
அந்த பூக்கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை அறிந்த போலீசார் அங்கு சென்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பூக்கடைகளை திறக்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். அப்போது ஏற்கனவே கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த தொழிலை நம்பியே தங்களது குடும்பம் இருக்கிறது என்றும், தற்போது மீண்டும் கொரோனா முழு ஊரடங்கை அரசு அறிவித்து இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் பூ வியாபாரிகள் உருக்கமாக தெரிவித்தனர்.
அபராதம்
இதனிடையே, சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கடைவீதி, சின்னக்கடை வீதி பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி கடைகள் செயல்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தடையை மீறி சிலர் பூக்கள் வியாபாரம் செய்ததால் அவர்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்