அரசு பள்ளி ஆசிரியை ரூ.50 ஆயிரம் கொரோனா நிதி

அரசு பள்ளி ஆசிரியை ரூ.50 ஆயிரம் கொரோனா நிதி வழங்கினார்

Update: 2021-05-12 19:39 GMT
பெரம்பலூர்
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அரசுக்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படுவதால் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்தவகையில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9, 10-ம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியையாக பணிபுரியும் பைரவி (வயது 41) நேற்று பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் மூலம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை அனுப்பினார். ஆசிரியை பைரவி ஏற்கனவே கடந்த மாதம் 29-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியதும், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, எளம்பலூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் 16 பேருக்கு ஆன்-லைனில் பாடங்கள் கற்பிக்க செல்போன்கள் வாங்கி கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்