712 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 712 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23,248 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 146 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 20,585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 2,517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தை சேர்ந்த 38 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
புதிய உச்சமாக 568 பேருக்கு தொற்று
மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 568 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,819 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21,070 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,602 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 14 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 560 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 144 பேருக்கு தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 681-ஆக உயர்ந்துள்ளது.