முள்ளங்கினாவிளையில் 95 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 95 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

Update: 2021-05-12 18:53 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 95 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.
பலத்த மழை
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதே போல நாகர்கோவில் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழை அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 95 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-16, பெருஞ்சாணி-48.6, சிற்றார் 1-22, சிற்றார் 2-42, மாம்பழத்துறையாறு-75.4, குளச்சல்-8.2, சுருளோடு-31.4, கன்னிமார்-3.4, மைலாடி-35.2, அடையாமடை-33, கோழிப்போர்விளை-80, புத்தன்அணை-47.8, நாகர்கோவில்-30, ஆனைக்கிடங்கு-61.4, பூதப்பாண்டி-8.2, கொட்டாரம்-5.8, முக்கடல்-4, பாலமோர்-9.6, களியல்-40, குழித்துறை-72, தக்கலை-63, இரணியல்-15 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
மழை காரணமாக அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 208 கனஅடி தண்ணீர் வந்தது.
பெருஞ்சாணி அணைக்கு 254 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 26 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 43 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 11 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 123 கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.
இதே போல குளங்களுக்கும் நீர்வரத்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காம்பவுண்டு சுவர் இடிந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெய்த பலத்த மழை காரணமாக நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 2-ல் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்