போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு

பெங்களூருவில், கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய சென்ற போது போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-05-12 18:35 GMT
பெங்களூரு:

நிர்வாகியை கொல்ல முயற்சி

பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்து வருபவர் ரகுநாத். இவரை, கடந்த 4-ந் தேதி ஆர்.எஸ்.பாளையா பகுதியில் வைத்து மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்று தப்பிவிட்டனர்.

இது குறித்து பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். விசாரணையில், ரகுநாத்தை கொலை செய்ய முயன்றது பிரபல ரவுடி சூர்யா, அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.


பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், சூர்யா, அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சூர்யாவின் கூட்டாளிகளான கிரீஷ், கிரண், அஜித், பிரவீன், ராகுல் ஆகிய 5 பேரையும் கைது செய்திருந்தனர். சூர்யா மட்டும் போலீசாரிடம் சிக்காமல் இருந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

இந்த நிலையில், பானசாவடி அருகே எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரவுடி சூர்யா சுற்றி திரிவது பற்றி உதவி போலீஸ் கமிஷனர் பரமேஸ்வருக்கு தெரியவந்தது. உடனே அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். 

போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ரவுடி சூர்யா ஓட்டம் பிடித்தார். உடனே போலீஸ் ஏட்டு அனுமேஷ் அவரை விரட்டி சென்று பிடித்தார். அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் அனுமேசை குத்தினார்.

இதில், ஏட்டு அனுமேசின் கையில் பலத்தகாயம் ஏற்பட்டது. சுதாரித்துக்கொண்ட உதவி போலீஸ் கமிஷனர் பரமேஸ்வர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ரவுடி சூர்யாவை சரண் அடைந்து விடும்படி எச்சரித்தார். ஆனால் அவர் சரண்அடைய மறுத்து விட்டார். மாறாக அங்கிருந்த போலீசாரை தாக்க முயன்றதுடன், தப்பி ஓடுவதற்கும் சூர்யா முயற்சித்தார்.

ரவுடி சுட்டுப்பிடிப்பு
இதையடுத்து, உதவி போலீஸ் கமிஷனர் பரமேஸ்வர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரவுடி சூர்யாவை நோக்கி ஒரு முறை சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அங்கேயே அவர் சுருண்டு விழுந்தார். பின்னர் ரவுடி சூர்யாவை போலீசார் பிடித்து கைது செய்தார்கள். உடனடியாக அவர் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதுபோல், படுகாயம் அடைந்த ஏட்டு அனுமேசும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி சூர்யா மீது ராமமூர்த்தி நகர், புலிகேசி நகர் போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகளும், கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட 4 வழக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த வழக்குகளில் போலீசாரிடம் அவர் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். ரகுநாத்தை கொலை செய்ய முயன்றது குறித்தும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூருவில் ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்