கே.வி.குப்பம் அருகே கொரோனா பாதிப்பில் இறந்தவரின் உடல் பாதுகாப்பு இல்லாத முறையில் ஒப்படைப்பு
கொரோனா பாதிப்பில் இறந்தவரின் உடலை பாதுகாப்பு இல்லாமல் துணியில் சுற்றி ஒப்படைத்ததால் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கே.வி.குப்பம்
கொரோனாவுக்கு பலி
கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கநேரியைச் சேர்ந்தவர் கஜராஜ். கோவில் சிலைகளுக்கு வண்ணம் தீட்டுபவர். இவரின் மனைவி கீதா (வயது 56). இவருக்கு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 4-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கீதா வேப்பங்கநேரியில் உள்ள வீட்டில் டாக்டர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டார். நேற்று கீதாவின் நிலைமை கவலைக்கிடமாக மாறியதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12.30 மணியளவில் கீதா உயிரிழந்தார்.
துணியில் சுற்றி ஒப்படைப்பு
அவருடைய உடலை கொரோனாவால் இறந்தவர்களின் உடலுக்கான முழு பாதுகாப்பு உறைக்குள் வைத்து அனுப்பாமல் சாதாரண துணியில் சுற்றி உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஊரில் தொற்று பரவும் அபாயம் எழுந்து மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்தனர். சுகாதார ஆய்வாளர் செழியன் இறுதிச் சடங்கு செய்வதற்காக கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை கொண்டு வந்து கொடுத்தார். அந்தக் கவச உடைகளை அணிந்தபடி ஊர்மக்கள் கீதாவின் உடலை பொக்லைன் உதவியோடு அச்சத்துடன் அடக்கம் செய்தனர்.