தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி கைது
பெங்களூருவில் படுக்கை முறைகேட்டில் தனியார் ஆஸ்பத்திரி அதிகாரி கைது
பெங்களூரு, மே:
பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு சார்பில் தனியார் மருத்துவமனைகளில் ஒதுக்கப்படும் படுக்கைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், படுக்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரியாக பணியாற்றும் அந்தோணி என்பவரை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர், தான் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை பெற்று கொடுப்பதாக கூறி பணம் பெற்று மோசடி செய்திருந்தார். இது தவிர அரசு சார்பில் ஒதுக்கப்படும் படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்காமல், தனி நபர்களுக்கு வழங்கி பணம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
கைதான அந்தோணியிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.