திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.;
திருவண்ணாமலை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகர பகுதியில் அரசு அறிவித்தப்படி மளிகை, காய்கறி, பழக்கடைகள் உள்ளிட்டவை திறந்து இருந்தது. இதனால் வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் சாலையில் காணப்பட்டது. முழு ஊரடங்கு போன்றே தெரியவில்லை. மாலையில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் சிலர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தபடி இருந்தனர். சில பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் 600 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நேற்று வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 603 ேபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 24 ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 325 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொேரானா தொற்றால் 336 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அரசு அறிவிக்கும் விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.