கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா தொற்று: புதுச்சேரி மாநிலத்திற்குள் தமிழக வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு போலீசார் கெடுபிடி

கட்டுக்கடங்காமல் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், தமிழக வாகனங்கள் புதுச்சேரி மாநிலத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அம்மாநில போலீசார் கெடுபிடி காட்டி வருவதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

Update: 2021-05-12 17:04 GMT
நெல்லிக்குப்பம், 


புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் வேகமாக பரவி வருகிறது. தினசரி தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ள கடலூர் பகுதியிலும் தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பெருந்தொற்று கட்டுக்குள் வராமல் பரவி இருக்கிறது. இதனால் தினசரி இதன் கோரபிடிக்குள் சிக்கி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.


திருப்பி அனுப்பினர்

எனவே தற்போது புதுச்சேரி மாநில அரசு, தமிழகப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை அம்மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுத்து வருகிறது. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.  இதற்காக  கடலூர் பெரியகங்கணாங்குப்பம் அருகே புதுச்சேரி மாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வரும் தமிழக பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் தொடங்கி கார், மினிலாரி உள்ளிட்ட வாகனங்களை மறித்து புதுச்சேரிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சைக்கு...

மருத்துவ சிகிச்சைக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்து வருகிறார்கள். இதில் மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் அதற்குரிய சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் புதுச்சேரி  மாநில பகுதிக்குள் ரெட்டிச்சாவடி, பெரிய காட்டுபாளையம், கீழ்அழிஞ்சிப்பட்டு, மேல் அழிஞ்சிப்பட்டு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தமிழகத்தை சேர்ந்த கிராமமாகும். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் நாங்கள் தினந்தோறும் இந்த வழியாகத்தான் சென்று வருகிறோம். ஆகையால் எங்களுக்கு எந்தவித தடையும் விதிக்கக் கூடாது என்றனர். 

உரிய ஆவணம்


இதற்கு போலீசார், தாங்கள் இந்த பகுதியை சேர்ந்தவர் என்றால் அதற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். புதுச்சேரி மாநில போலீசாரின் இந்த கெடுபிடி காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகள்