ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 1,051 பேருக்கு கொரோனா. தொற்றுக்கு 4 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 1,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர்.
ராணிப்பேட்டை
1,051 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
மேலும் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பகல் 12 மணிவரை மளிக்கைக்கடை, காய்கறி கடைகள், டீக்கடை, பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிய உச்சமாக 1,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4 பேர் பலி
பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும் 2,533 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 1,121 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று 4 பேர் உயிரிழந்தனர்.
மாவட்டத்தில் தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முககவத்துடனும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் 1,051 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.