இலவச பட்டா நிலத்தில் கட்டிய வீடுகளை இடித்ததாக வழக்கு

இலவச பட்டா நிலத்தில் கட்டிய வீடுகளை இடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-05-12 16:35 GMT
மதுரை,
மதுரை திருநகரைச் சேர்ந்த நயினார்முகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2009-ம் ஆண்டு இலவச வீட்டு மனை திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றத்தில் இருந்த அரசு நிலத்தில் 2 சென்ட் நிலம் எனக்கு வழங்கப்பட்டது. பின்னர் அந்த மனைக்கு பட்டா வாங்கி, 6 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி, அதில் குடி இருந்து வருகிறேன். கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின் எங்கள் பகுதி மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை மாநகராட்சியிடம் செலுத்தி வருகிறேன். என்னைப்போல 50-க்கும் மேற்பட்டோர் இங்கு வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்களும் முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் எங்கள் மனைகளை தவிர அங்கு மீதம் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் அதிகாரிகள் திடீரென எங்கள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை வெளியேற்றி வீட்டையும் இடித்துள்ளனர். இதற்காக எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்