தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் 3-வது நாளாக ஓய்வெடுத்த சாலைகள்

தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு எதிரொலியாக சாலைகள் 3-வது நாளாக ஓய்வெடுத்தன.

Update: 2021-05-12 16:22 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு எதிரொலியாக சாலைகள் 3-வது நாளாக ஓய்வெடுத்தன. முழு ஊரடங்கால் 3-வது நாளாக ஓய்வெடுத்த சாலைகள்
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 10-ந்தேதி முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. வருகிற 24-ந்தேதி அதிகாலை வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்தது.
இந்தநிலையில் முழு ஊரடங்கின் 3-வது நாளான நேற்று பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பகல் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அத்தகைய கடைகள் மட்டும் திறந்து இருந்தன. இதனால் பகல் 12 மணி வரை சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் சென்று வந்தன. பிற்பகலுக்கு பிறகு 3-வது நாளாக நேற்றும் சாலைகள் ஓய்வெடுத்தன.
கிராமப்புற பகுதிகள்
நகர்ப்புற பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளிலும் பகல் 12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு வருகின்றன. போலீசார் ரோந்து சுற்றி வருவதோடு, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்களும் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
சாலைகளில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி வரும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்