தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு மேலும் ஒரு சித்த மருத்துவ சிகிச்சை மையம்

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு மேலும் ஒரு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-05-12 16:18 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு மேலும் ஒரு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சித்த மருத்துவ சிகிச்சை
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கொரோனா நல சிகிச்சை மையங்கள் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் உத்தரவுப்படி தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மற்றும் யோகா, மனவளக்கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு கூடுதலாக மேலும் ஒரு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் கடந்த ஆண்டு சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்ட தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த ஆண்டும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அந்த சிகிச்சை மையத்தை ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், "கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்போது தேனி அரசு மருத்துவமனை, போடி அரசு பொறியியல் கல்லூரி, தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தப்புக்குண்டு மற்றும் வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய இடங்கள் கொரோனா நல மையங்களாக செயல்படுகின்றன. அங்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோம்பை பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்புகளையும் கொரோனா நல மையமாக மாற்றுவது குறித்து திட்டமிடப்பட்டு பரிசீலனையில் உள்ளது" என்றார்.
இந்த ஆய்வின் போது பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்