வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின
3 -வது நாளாக முழு ஊரடங்கு காரணமாக கூடலூர் பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.;
கூடலூர்
3 -வது நாளாக முழு ஊரடங்கு காரணமாக கூடலூர் பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.
3-வது நாளாக ஊரடங்கு
நீலகிரி மாவட்டத்தில் 3-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறி மளிகை கடைகள் திறந்து இருந்தது.
இதனால் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர். பின்னர் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதனால் கூடலூரில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அபராதம்
கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்புக்கு நின்றவாறு ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அரசு அனுமதித்துள்ள கால அவகாசத்தில் சமூக இடைவெளி இல்லாமல் வாடிக்கையாளர்களை நிறுத்தி வியாபாரம் செய்த கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தொரப்பள்ளி, ஸ்ரீமதுரை, தேவாலா, பந்தலூர், மசினகுடி, நடுவட்டம், டி.ஆர். பஜார், சேரம்பாடி, கொளப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது