ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை பிடிக்க ஆயிரம் போலீசார்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை பிடிக்க ஆயிரம் போலீசார் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-12 14:33 GMT
திண்டுக்கல்: 

ஊரடங்கில் சுற்றித்திரியும் நபர்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ந்தேதி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 

இதனால் மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படுகின்றன. 

ஓட்டல்களில் பார்சலில் உணவு வழங்கப்படுகிறது. 

மேலும் பஸ்கள், வேன், கார், ஆட்டோ ஆகியவை ஓடவில்லை. 

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் அடையாள அட்டையுடன் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஆனால், திண்டுக்கல்லில் ஊரடங்கை பயன்படுத்தி சிலர் இரவு வரை வாகனங்களில் ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் சிறிதும் இல்லாமல் சுற்றித்திரிகின்றனர்.

ஆயிரம் போலீசார் 
இதுபோன்ற நபர்களை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் ஊரடங்கு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மாவட்ட எல்லையில் உள்ள 11 சோதனை சாவடிகள், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.


இவர்கள் வாகன சோதனை நடத்தி முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். 

அதோடு கடைகள் அடைக்கப்பட்ட பின்னர் தேவையில்லாமல் வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர்.


அதன்படி திண்டுக்கல்லில் நேற்று பஸ்நிலையம், வாணிவிலாஸ் சந்திப்பு, நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது ஊரடங்கு விதிகளை மீறிய நபர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். 


இதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். 

அப்போது போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்