அசாம் ஐகோர்ட்டில் ஆஜரான சாட்சியிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ரூ.2 லட்சம் மோசடி வழக்கு தொடர்பாக அசாம் ஐகோர்ட்டில் ஆஜரான சாட்சியிடம் ஊட்டி நீதிபதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார்.;
ஊட்டி
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ரூ.2 லட்சம் மோசடி வழக்கு தொடர்பாக அசாம் ஐகோர்ட்டில் ஆஜரான சாட்சியிடம் ஊட்டி நீதிபதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார்.
மோசடி வழக்கு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு அங்கு பணிபுரிந்த மேலாளர் நாகரள்ளி, மராட்டியம் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலக மேலாளர் உஜ்வால் உள்ளிட்டோர் எஸ்.டி.டி., சர்வதேச அழைப்புகள் போன்றவற்றில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரூ.2 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
தற்போது கோடை காலம் மற்றும் முழு ஊரடங்கு என்பதால் கோர்ட்டில் நேரடியாக விசாரணை நடைபெறவில்லை.
சாட்சியிடம் விசாரணை
இந்த நிலையில் ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அருணாச்சலம் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் மோசடி வழக்கு விசாரணை நடந்தது.
அசாம் மாநிலம் கவுகாத்தி ஐகோர்ட்டில் ஆஜரான வழக்கின் சாட்சியான உஜ்வால் என்பவரிடம் மோசடி நடந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் 9 பேர் குற்றவாளிகள். 63 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 27-வது சாட்சியாக உஜ்வால் உள்ளார். மற்றவர்களிடம் விசாரிக்கப்பட இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.