கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் பலி

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் பலியானார்.

Update: 2021-05-12 13:56 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பட்டதாரி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
பட்டதாரி
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் அழகு முருகராஜ் (வயது 22). பி.காம்.பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் மாலையில் ராமமூர்த்தி மகன் ராஜ கோபால் ( 12) என்ற சிறுவனுடன் வீட்டு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் ஆடுகளுக்கு மரக்கிளைகளை பறிக்க சென்றார்.
தோட்டத்துக்கு...
அப்போது அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் எதிர்பாராத விதமாக அழகு முருகராஜ் மீது மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அவருடன் சென்ற சிறுவன் கதறி அழுதவாறு செய்வதறியாது நின்று விட்டான். 
நீண்டநேரமாக அழகு முருகராஜ் வீட்டுக்கு வராததால்,  அவருடைய தந்தை ஜெயச் சந்திரன், அண்ணன் ஜெயப் பிரகாஷ் ஆகியோர் தோட்டத் திற்கு தேடி சென்றனர். அங்கே மயங்கி கிடந்த அழகு முருகராஜை ஆட்டோவில் ஏற்றி கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் டாக்டர் பரிசோதனை செய்த போது அழகு முருகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா். 
போலீசார் விசாரணை
தகவல் அறிந்ததும் கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அழகு முருகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் முடுக்கலாங்குளம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மேலும் செய்திகள்