நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வினியோகம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.;
முருகபவனம்:
நோயாளிகளுக்கு உணவு
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு முதல் அன்னதானத்துக்கு பதிலாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா காலத்து பேரிடர் உதவியாக இந்த அன்னதான திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உடன் இருப்போர் என அனைவருக்கும் நாள்தோறும் உணவு பொட்டலங்கள் வழங்க அரசு உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை
இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு நாள்தோறும் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி, மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அரசு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாள்தோறும் உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழனி அரசு மருத்துவமனை
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் தமிழகம் முழுவதும் கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், அன்னதானம் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன்படி பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கிராந்தி குமார் பாடி உத்தரவின்பேரில், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக நேற்று நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பழனி அரசு மருத்துவமனை அலுவலர் உதயகுமாரிடம் உணவு பொட்டலங்களை வழங்கினர்.