மாதம் ரூ.100 கோடி மாமூல் விவகாரம்: முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீது பணமோசடி வழக்கு அமலாக்கத்துறை அதிரடி
மாதம் ரூ100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி போலீசாரை கட்டாயப்படுத்திய மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது அமலாக்கத்துறை பணமோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மும்பை,
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கை தொடர்ந்து மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து பார், ஓட்டல்களிடம் இருந்து மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மீது பரம்பீர் சிங் பரபரப்பு குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, 71 வயதான முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீது கடந்த மாதம் 21-ந் தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாதம் ரூ.100 கோடி மாமூல் கேட்டு கட்டாயப்படுத்திய விவகாரம் மற்றும் போலீஸ் நியமனம், பணியிடமாற்றம் ஆகியவற்றில் நடந்ததாக கூறப்படும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இதன் மூலம் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிடம் நேரில் விசரணை நடத்த சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் விசாரணை கட்டத்திலேயே சொத்துகளை முடக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருப்பதால், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீதான ஊழல் விவகாரத்தில் பிடி இறுகி உள்ளது.