வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே பணிநீக்கம்

வெடிகுண்டு கார் வழக்கில் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-05-12 13:30 GMT
மும்பை, 

மும்பையில் உள்ள பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி 25-ந் தேதி வெடிப்பொருட்கள் நிரம்பிய கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த காரின் உரிமையாளர் ஹிரேன் மன்சுக் கொலை செய்யப்பட்ட நிலையில் தானே கழிகமுகப்பகுதியில் மார்ச் 5-ந் தேதி அவரது உடல் மீட்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் என்.ஐ.ஏ. மார்ச் 13-ந் தேதி மும்பை போலீஸ் உதவி இன்ஸ்பெக்டராக இருந்த சச்சின் வாசேயை கைது செய்தது.

விசாரணையில் சச்சின் வாசே வெடிகுண்டு கார், ஹிரேன் மன்சுக் கொலையில் முக்கிய குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் அவர் போலீசில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘சச்சின் வாசே போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலே பிறப்பித்து உள்ளார்’’ என்றார்.

சச்சின் வாசே, வெடிகுண்டு வழக்கு குற்றவாளியின் போலி என்கவுன்ட்டர் வழக்கில் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவர் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டில் தான் பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டாா். மேலும் இவர் அதிகாரம் மிக்க மும்பை குற்றப் புலனாய்வு பிரிவில் உதவி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு இருந்தார். போலி டி.ஆர்.பி. முறைகேடு, போலி சமூகவலைதள பின்தொடர்பவர்கள், கார் வங்கி கடன் வழக்கு முறைகேடு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்