வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலூர்
போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா தொற்றின் அறிகுறிகள் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றில் இருந்து மீள்வதற்காக சிகிச்சைகள் எடுத்து கொண்டார். ஆனாலும் தொற்றின் அறிகுறி தொடர்ந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி நடமாடும் மருத்துவக்குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு வீட்டிற்கு சென்று அவரின் சளிமாதிரியை பரிசோதனைக்காக சேகரித்து சென்றனர்.
வீட்டில் சிசிக்சை
தொடர்ந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் சிறப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுவுடன் செல்லும் பாதுகாப்பு போலீசாருக்குக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு லேசான தொற்று அறிகுறியே காணப்பட்டது. அதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓரிரு நாளில் தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விடுவார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கொரோனா தொற்றுவினால் பாதிக்கப்பட்டது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.