சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உதவி மையத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உதவி மையத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு வெளிமாநில பயணிகளுக்கு தேவையான உதவிகள் செய்திட அறிவுறுத்தல்.
சென்னை,
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரைகளுக்கு ஏற்ப மாநில-மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு வெளிமாநில தொழிலாளர்கள் குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கம் காரணமாக தங்கள் சொந்த மாநிலம் செல்லும் வடமாநில தொழிலாளர்களின் சிரமங்களை களைய சென்னை சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தெற்கு ரெயில்வே ஒருங்கிணைப்புடன் தொழிலாளர் துறையின் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மைய செயல்பாடுகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதின், தொழிலாளர் கமிஷனர் மா.வள்ளலார் ஆகியோர் நேற்று பார்வையிட்டு உதவி மைய அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
அப்போது சொந்த மாநிலம் செல்ல பயணச் சீட்டுடன் காத்திருந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர். அப்போது மாநகராட்சி துணை கமிஷனர் மேகநாதரெட்டி, தெற்கு ரெயில்வே நிலைய இயக்குனர் உமாசங்கள், சென்னை தொழிலாளர் உதவி கமிஷனர் உ.உமாதேவி, இணை கமிஷனர் பா. மாதவன் மற்றும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.