கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 300 படுக்கை வசதிகள்- கலெக்டர் கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-05-11 22:47 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். எனவே கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்ர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
300 படுக்கை வசதிகள்
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதி, செங்குந்தர் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றில் கூடுதலாக 300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 550 படுக்கைகளும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 250 படுக்கைகளும், கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், பெருந்துறை ஆகிய அரசு ஆஸ்பத்திாகளில் 972 படுக்கைகளும் உள்ளன. இதுதவிர தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே மொத்தம் 2 ஆயிரத்து 660 படுக்கை வசதிகள் உள்ளன.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்