கொரோனாவுக்கு ஒரே நாளில் போலீஸ் ஏட்டு, அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலி
நாமகிரிப்பேட்டை அருகே ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் ஏட்டு, அரசு பள்ளி தலைமை ஆசிரியை இறந்தனர்.
ராசிபுரம்:
நாமகிரிப்பேட்டை அருகே ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் ஏட்டு, அரசு பள்ளி தலைமை ஆசிரியை இறந்தனர்.
போலீஸ் ஏட்டு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 52). இவர் மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் கடந்த ஓராண்டாக ஏட்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியம் கடந்த 5-ந் தேதி ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
21 குண்டுகள் முழங்க...
இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பாலசுப்பிரமணியம் உடலுக்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து போலீஸ் மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அவரது உடல் ராசிபுரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கொரோனாவுக்கு பலியான போலீஸ் ஏட்டு பாலசுப்பிரமணியத்துக்கு சித்ரா (42) என்ற மனைவியும், ஆதிவிக்னேஷ் (21), சஞ்சீவ்குமார் (17) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியை
நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் தங்கம். இவர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை தங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஒரே நாளில் கொரோனாவுக்கு போலீஸ் ஏட்டு, அரசு பள்ளி தலைமை ஆசிரியை இறந்த சம்பவம் ராசிபுரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.