ஓமலூர் அருகே பரபரப்பு மூதாட்டி அடித்துக்கொலை மகன் கைது
ஓமலூர் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டி பீ.குட்டை ஏரி அருகே வசித்து வருபவர் அருள். இவரது மனைவி செல்வமேரி (வயது 60). இவர்களுக்கு ஜெரால்ட் கிறிஸ்டோபர் (38), சகாயராஜ் (40) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
அருளும், செல்வமேரியும் தங்களுக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் கூலி வேலையும் செய்து வந்தனர். செல்வமேரியிடம் அவரது மகன்கள் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
காயத்துடன் பிணம்
இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் செல்வமேரி அவர் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சென்று பார்த்தனர். அப்போது செல்வமேரியின் முகத்தில் கண் புருவத்துக்கு கீழ் காயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
விசாரணையில், செல்வமேரி அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக செல்வமேரியின் மகன்கள் 2 பேரிடமும் ஓமலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் விசாரணை நடத்தினார். இதையடுத்து அவருடைய மகன் சகாயராஜை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.