ஊரடங்கு தளர்வு நாட்களில் சேலம் மாவட்டத்தில் ரூ.42½ கோடிக்கு மது விற்பனை

ஊரடங்கு தளர்வு நாட்களில் சேலம் மாவட்டத்தில் ரூ.42 ½ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-11 21:20 GMT
சேலம்:
ஊரடங்கு தளர்வு நாட்களில் சேலம் மாவட்டத்தில் ரூ.42 ½ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் நேற்று முன்தினம் முதல் வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. இதனால் அந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் விற்பனையும் படுஜோராக நடந்தது. மதுபிரியர்கள் அதிகமாக கூடுவார்கள் என்பதால் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபாட்டில்கள் இருப்பு வைத்திருந்தனர்.
ரூ.42½ கோடிக்கு விற்பனை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கூடுதலாக மதுபாட்டில்கள் வாங்கி சென்றனர்.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 8-ந் தேதி ரூ.22 கோடியே 89 லட்சத்துக்கும், 9-ந் தேதி ரூ.19 கோடியே 61 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.42½ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்