ஊரடங்கை மீறி சர்வசாதாரணமாக சாலையில் உலாவரும் வாகனங்கள்
திருச்சி மாநகரில் ஊரடங்கை மீறி சாலையில் சர்வசாதாரணமாக வாகனங்கள் வலம் வருகின்றன.
திருச்சி,
திருச்சி மாநகரில் ஊரடங்கை மீறி சாலையில் சர்வசாதாரணமாக வாகனங்கள் வலம் வருகின்றன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்திலும் அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், திருச்சி மாநகரில் ஊரடங்கு அமலில் உள்ளதா? என சந்தேகப்படும் வகையில் மதியம் 12 மணிவரை சொந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சாலையில் சர்வசாதாரணமாக வலம் வருகிறார்கள்.
காந்தி மார்க்கெட்டில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க என சாரை சாரையாக கார்களில் வந்து செல்கிறார்கள். மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவோர், இதர அத்யாவசிய பொருட்கள் வாங்க வருவோர் என சாலையில் செல்வதால் இயல்பு நிலை இருப்பதுபோல உள்ளது.
சாலைகள் அடைப்பு
பகல் 12 மணி ஆனதும் ஆங்காங்கே முக்கிய சாலைகள் பேரிகாட் போட்டு போலீசாரால் தடை செய்யப்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் காலை 11.45 மணிக்கே கடைகளை அடைக்க ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 12 மணிக்கு மூடப்பட்டது.
காந்தி மார்க்கெட்டில் இருந்து பெரியகடை வீதி செல்லும் சாலை இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத வகையில் பகல் 12 மணிக்கு தடுப்பு ஏற்படுத்தி தடை செய்யப்பட்டது. இதுபோல திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இரும்பு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.