சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 1,647 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 52 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரமங்கலம் மண்டலத்தில் 11 பகுதிகளும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 16 பகுதிகளும், அம்மாபேட்டை மண்டலத்தில் 10 பகுதிகளும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 15 பகுதிகளும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 1,872 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி குகை, அம்பலவாண சுவாமி கோவில் தெரு, சீலநாயக்கன்பட்டி, வேல் நகர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கண்காணிப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகளை பார்வையிட்டு ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அவர்கள் தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் பணியாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்பதை கேட்டறிந்தார்.
முன்னதாக குகை, ஒபுளி தெருவில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சித்த மருத்துவ முகாமையும், சீலநாயக்கன்பட்டி ராமைய்யன் நகர் ஸ்ரீ கங்கை மாரியம்மன் கோவில் வளாகம் மற்றும் குமரன் நகர் பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகர நல அலுவலர் கே.பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், சுகாதார அலுவலர் வி.பாலு, சுகாதார ஆய்வாளர்கள் திரு.ஆர்.சந்திரன், ஏ.கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.