சேலம் கோட்டத்தில், ஊரடங்கு தளர்வு நாட்களில் அரசு பஸ்கள் மூலம் 7½ லட்சம் பேர் வெளியூர் பயணம்

சேலம் கோட்டத்தில் இருந்து ஊரடங்கு தளர்வு நாட்களில் அரசு பஸ்கள் மூலம் 7½ லட்சம் பேர் வெளியூர் பயணம் செய்துள்ளனர்.

Update: 2021-05-11 21:01 GMT
சேலம்:
சேலம் கோட்டத்தில் இருந்து ஊரடங்கு தளர்வு நாட்களில் அரசு பஸ்கள் மூலம் 7½ லட்சம் பேர் வெளியூர் பயணம் செய்துள்ளனர்.
சிறப்பு பஸ்கள்
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியூர்களில் தங்கியிருந்து வேலைபார்த்து வருபவர்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காகவும், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவும் 8 மற்றும் 9-ந் தேதிகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.
இதனால் அந்த 2 நாட்களிலும் சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணிகள் வசதிக்காக சேலம் கோட்டத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களிலும் கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன.
7½ லட்சம் பேர் பயணம்
சேலம் கோட்டத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 2 நாட்களில் சேலம் மாவட்டத்தில் இருந்து 4½ லட்சம் பேர் வெளியூர் பயணம் செய்துள்ளனர். அதே போல சேலம் கோட்டத்தில் இருந்து 7½ லட்சம் பேர் வெளியூர் பயணம் செய்து உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றதும் அரசு பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் உள்ளிட்ட 5 கோப்புகளில் முதலாவதாக கையெழுத்திட்டார். அதன்படி, சேலம் கோட்டத்தில் 837 அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். சேலம் கோட்டத்தில் சராசரியாக 35 சதவீத பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்