தஞ்சாவூரில் இருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு 5 டன் ஆக்சிஜன் வந்தது

தஞ்சாவூரில் இருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு 5 டன் ஆக்சிஜன் வந்தது.

Update: 2021-05-11 20:34 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 800 படுக்கைகள் ஆக்சிஜன் செயற்கை சுவாசம் அளிக்க வசதியாக உள்ளது. 

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முழுமையாக ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதால் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கொள்கலனில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதையொட்டி அவ்வப்போது டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

திருச்சி, தஞ்சாவூரில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென்று தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனடியாக நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பகலில் 3 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. இரவிலும் கூடுதலாக ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பினர். இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள புதுக்குடியில் இருந்து டேங்கர் லாரியில் 5 டன் ஆக்சிஜன் ஏற்றி நேற்று காலை நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஆக்சிஜன் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனில் நிரப்பப்பட்டது.

இதேபோல் தொடர்ந்து ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனும் ஒதுக்கீட்டின்படி நெல்லைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்