முழு ஊரடங்கால் மாறிய மக்களின் இயல்பு வாழ்க்கை

அரியலூரில் முழு ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியுள்ளது.

Update: 2021-05-11 20:20 GMT
அரியலூர்:

இயல்பு வாழ்க்கை மாறியது
கொரோனா 2-வது அலையின் தாக்கத்தால் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு நேற்று முன்தினம் முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரியலூரில் முழு ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிப்போனது.
வழக்கமாக அரியலூர் பகுதியில் காலையிலேயே பஸ் போக்குவரத்து, காய்கறி மற்றும் பால் வாகனங்கள், பயணிகள் நடமாட்டம், நடைபயிற்சி செல்பவர்கள் என பரபரப்பாக இயங்க தொடங்கும். அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் டீக்கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற கடைகளும் காலை முதல் இரவு வரை செயல்படும்.
வாகன போக்குவரத்து இன்றி...
ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக காலை 6 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு மூடப்பட்டு விடுவதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் கடைகளுக்கு வந்து வாங்கிக்கொண்டு, அவரவர் வீடுகளிலேயே இருந்து விடுகின்றனர். பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களின் போக்குவரத்து இல்லாததால் நகரமே அமைதியாக உள்ளது.
வருவாய்த்துறை மற்றும் நகராட்சி பணியாளர்கள், காவல்துறையினர் வாகனங்கள் மட்டும் சாலைகளில் சென்று வருகின்றன. அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருவதால், மக்கள் கூடுவதற்கான தேவை இல்லாமல் போனது.
அபராதம்
பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம், ெரயில் நிலையம், காந்தி மார்க்கெட், தேரடி ஆகிய பகுதிகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன. வங்கிகளில் வேலை நேரம் குறைக்கப்பட்டு, மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படுகின்றன. வெளியூர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வர முடியாததால், வங்கியில் குறைந்த அளவே கூட்டம் உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழக்கமான கூட்டம் உள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்படும் கடைகளுக்கு அவர்கள் அபராதம் விதிக்கின்றனர்.

மேலும் செய்திகள்