வீட்டில் கோபித்துக்கொண்டு வந்த சிறுவன் மீட்பு
வீட்டில் கோபித்துக்கொண்டு வந்த சிறுவனை போலீசார் மீட்டனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை போலீஸ்காரர் விக்னேஷ் என்பவர் நேற்று குறுக்கு ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு சிறுவனை நிறுத்தி விசாரித்தார். இதில், அவன் வடலூர் கிழக்கு தெருவை சேர்ந்த கொளஞ்சி மகன் அர்ஜூன்(வயது 14) என்பது தெரியவந்தது. மேலும் தற்போது அர்ஜூன் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனது அக்காள் வீட்டில் குடியிருந்து வந்தான். நேற்று வீட்டில் கோபித்துக்கொண்டு வடலூர் செல்ல காட்டுமன்னார்கோவிலில் இருந்து நடந்து வந்தபோது, வழிதவறி குறுக்கு ரோட்டிற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அர்ஜூனுக்கு, விக்னேஷ் உணவு வாங்கிக் கொடுத்தார். மேலும் இது குறித்து அருகில் உள்ள கடலூர் மாவட்டம் சோழத்தரம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த சோழத்தரம் போலீசாரிடம் சிறுவனை ஒப்படைத்தனர். பின்னர் அவனது பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கி, அவர்களிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனின் பெற்றோர், போலீஸ்காரர் விக்னேஷ் மற்றும் போலீசார் நன்றி தெரிவித்தனர்.