அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் செல்ல அனுமதி
கர்நாடகத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளித்து போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
வாகனங்கள் பறிமுதல்
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகே உள்ள கடைகளுக்கு நடந்து சென்ற பொருட்கள் வாங்க வேண்டும், வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றும் போலீசார் உத்தரவிட்டு இருந்தனர்.
ஆனால் போலீசாரின் உத்தரவை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து நேற்று முன்தினம் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தார்கள். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போது வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.
பயன்படுத்தி கொள்ள அனுமதி
இதுதொடர்பாக அவா் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதற்கு வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் தங்களது வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை காரணம் காட்டி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.
அப்போது தேவையில்லாமல் சுற்றினாலோ, விதிமுறைகளை மீறினாலோ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்.