கொரோனா விதிகளை பின்பற்றாத 30 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
கொரோனா விதிகளை பின்பற்றாத 30 வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் கிணத்துக்கடவு தாலுகாவில் தாசில்தார் சசிரேகா மேற்பார்வையில் கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில் பாளையம் பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் தலைமையில் 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த குழுக்கள் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினார்கள்.
அதில் ஒரு தொழிற்சாலை மற்றும் 30 வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமலும், கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனஙகளுக்கு மொத்தம் ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.