பொள்ளாச்சியில் காந்தி சிலை அகற்றம்

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் காந்தி சிலையை அகற்றினர்.

Update: 2021-05-11 17:50 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் காந்தி சிலையை அகற்றி ரவுண்டானாவில் வைக்க திட்டமிட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலை விரிவாக்கம்

பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதையடுத்து தனியார் மற்றும் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.33 கோடியே 55 லட்சமும் சாலை விரிவாக்க பணிக்கு ரூ.34 கோடியே 51 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
காந்தி சிலை சிக்னல், பஸ் நிலைய பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகிறது.

காந்தி சிலை

பொள்ளாச்சி நகரின் மைய பகுதியான நியூஸ்கீம் ரோட்டில் தமிழிசை சங்கம் சார்பில் கடந்த 1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி காந்தி சிலை அமைக்கப்பட்டது. இதற்கிடையில் நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய முக்கிய சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. 

இதற்காக தற்போது உள்ள காந்தி சிலையை அகற்றி ரவுண்டானாவில் வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கிரேன் மூலம் காந்தி சிலையை பாதுகாப்பாக தூக்கினர். பின்னர் சிலையை சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பாதுகாப்பாக அகற்றம்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் நகரில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. பஸ் நிலையம், காந்தி சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. 

நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள காந்தி சிலை பாதுகாப்பாக அகற்றப்பட்டு உள்ளது. மேலும் சிலை தற்போது சப்-கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்க பணிகள் முடிந்ததும் சிலை ரவுண்டானாவில் வைக்கப்படும்.

மேலும் சிலை வைக்கப்படும் பகுதியை சுற்றி புல்வெளி அமைக்கப்படும். தற்போது 60 சதவீதம் சாலை பணிகள் முடிந்து உள்ளன. இன்னும் 2 மாதத்தில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்