ஒரே நாளில் 19 பேர் சாவு; 2,650 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 19 பேர் சாவு 2,650 பேருக்கு கொரோனா

Update: 2021-05-11 17:47 GMT
ஒரே நாளில் 19 பேர் சாவு; 2,650 பேருக்கு கொரோனா
கோவை

சென்னையை அடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும், உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 546 ஆக உயர்ந்தது. 

இதுதவிர, நேற்று கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 1,723 பேர் குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 429-ஆக உள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் நபர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

அதன்படி, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 324 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

சிகிச்சைப்பெறும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 2,853 உள்ள நிலையில், 19 படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தது. 

சாதாரண படுக்கைகள் 684, ஐ.சி.யு படுக்கை 2 மட்டுமே காலியாக இருப்பதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கோவையில் இது வரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 19 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

அதன்படி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 2 பெண்கள், 25 வயது வாலிபர் உள்பட 14 பேர் என மொத்தம் 19 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 793 ஆக உயர்ந்தது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலை பார்க்கும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மக்கள் தொடர்பு அலுவலகம் மூடப்பட்டது.

மேலும் செய்திகள்