வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
முழு ஊரடங்கு எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
முழு ஊரடங்கு எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதிலும் நோய் தொற்று குறையவில்லை. இதை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகம் ஆகிய கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், வானமாதேவி, சிறுதலைக்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் பைபர் படகுகள் உள்ளன. தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் ஆறுகாட்டுத்துறையில் உள்ள 60 விசைப்படகுகளில் மீீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகை பழுது பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த தூரம் சென்று பைபர் படகில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இதனால் வேதாரண்யம் பகுதியில் மீன் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வந்தது.
மீன்பிடிக்க செல்லவில்லை
தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் பைபர் படகு மீனவர்கள் 5 ஆயிரம் பேர் நேற்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 6 மணி முதல் 12 மணிக்குள் கடலில் பிடித்த மீன்களை கரைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. . இதை நடைமுறைப்படுத்த முடியாததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மேலும் படகு, வலைகள் ஆகியவற்றை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.