தேனி மாவட்டத்தில் மது விற்ற 184 பேர் கைது

தேனி மாவட்டத்தில் மது விற்ற 184 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 634 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-11 16:42 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் மது விற்ற 184 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 634 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுவிற்பனை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மதுவிற்பனையும் தடை செய்யப்பட்டு, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த 9-ந்தேதி டாஸ்மாக் கடைகளில் இருந்து பலரும் மொத்தமாக மதுபான பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் நபர்கள் குறித்து தேடுதல் வேட்டை நடத்தி அவர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2 நாட்களாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
184 பேர் கைது
இந்த சோதனையின் போது, மாவட்டத்தில் பல இடங்களிலும் மதுவிற்பனை செய்தவர்கள் சிக்கினர். வடபுதுப்பட்டியில் மதுவிற்ற அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது 52) என்பவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் மதுவிற்ற அல்லிநகரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (23), கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி (52) ஆகியோரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் உள்பட கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் மதுவிற்ற 184 பேர் கைதாகினர். அவர்களிடம் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 634 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் அதிரடியாக 184 பேரை கைது செய்துள்ள நிலையில், இந்த நபர்களிடம் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்