வாணியம்பாடியில் கொரோனாவுக்கு தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் பலி

வாணியம்பாடியில் கோரோனா தொற்று காரணமாக பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் பலியானார்கள்.;

Update: 2021-05-11 16:22 GMT
வாணியம்பாடி

மருத்துவமனையில் இடமில்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. வாணியம்பாடி நகரம், ஆலங்காயம், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நோய் பரவி வருகிறது. இதனை தடுக்க திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இருப்பினும் நோய் தொற்று தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சேர்ப்பதற்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் பலி

வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஜோஸ்பின் வசந்த மல்லிகா (வயது 56) என்பவர் கடந்த 4 நாட்களாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இதேபோல் வாணியம்பாடி நகரை சேர்ந்த மேலும் இருவரும், கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர். 

இதனால் வாணியம்பாடி பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தொற்று நோயை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் பலர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு மேலும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்