புதிய டாஸ்மாக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

சிவகாசி அருகே உள்ள தேன் காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

Update: 2021-05-11 16:08 GMT
சிவகாசி,மே.
சிவகாசி அருகே உள்ள தேன் காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை மேற்கொண்டதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். 
தேன்காலனி
சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேன்காலனியில் சுமார் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த மக்கள் அருகில் உள்ள பட்டாசு ஆலைகளில் பணியாற்றி தங்களது வாழ்வாதாரத்தை காத்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் சிவகாசி நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றி தேன் காலனிக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் ஒன்று கூடி புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த வருவாயத்துறை அதிகாரிகள் தேன்காலனிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்கனவே 200 மீட்டர் தூரத்தில் இன்னொரு டாஸ்மாக் கடை இயங்கிவரும் நிலையில் புதிய டாஸ்மாக் கடையை ஊருக்கு மத்தியில் கொண்டு வருவதை எதிர்ப்பதாக கிராம மக்கள் கூறினர். இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நேற்று காலை நடத்த இருந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்