கோத்தகிரி காந்தி மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கும் பணி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கும் பணியில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2021-05-11 15:24 GMT
கோத்தகிரி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கும் பணியில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

காந்தி மைதானத்துக்கு மாற்றம் 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. நோய்தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க காய்கறி மற்றும் பழக்கடைகளை திறந்த வெளி மைதானத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. 

கடைகள் அமைக்கும் பணி 

மேலும் பேரூராட்சி சார்பில் குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று கோத்தகிரி பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன் மழை பெய்யக்கூடிய அறிகுறி இருந்தது.

 இதையடுத்து வியாபாரிகள் காய்கறிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியாக தகர கொட்டகைகள் மூலம் கடைகள் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். 

முகக்கவசம் 

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, கொரோனா பரவலை தடுக்க இங்கு கடைகள் மாற்றப்பட்டு உள்ளன. எனவே இங்கு தகர கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

எனவே இங்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வலியுறுத்தி வருகிறோம் என்றனர். 

கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள மளிகை, கோழி இறைச்சி மற்றும் மீன் கடைகள் தொடர்ந்து அதே பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டாலும், போக்குவரத்து தடை காரணமாக பொதுமக்கள் வருகை குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்