உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

மடிக்கணினி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு மாணவி வழங்கினாா்.

Update: 2021-05-11 15:13 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கதனேசன்- தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் சிந்துஜா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மடிக்கணினி வாங்க, உண்டியலில் பணம் சேர்த்து வந்தார். 
சமீபத்தில் தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் சிந்துஜா கலந்து கொண்டு 2-வது பரிசாக ரூ.500-ஐ பெற்றார். அதையும் உண்டியலில் போட்டார். 
தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் பாதிப்புகள் குறித்தும், தமிழக முதல்-அமைச்சருக்கு பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருகிறார்கள்.
 எனவே தான் ஆசையாக மடிக்கணினி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்த கதனேசன், உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1,500-ஐ வங்கியில் கொடுத்து வரைவோலையாக எடுத்தார். பின்னர் அதனை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நேற்று மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார். மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்