70 இடங்களில் தடுப்பு அமைத்து போலீசார் தீவிர சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக 70 இடங்களில் தடுப்பு அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் விதிகளை மீறியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2021-05-11 14:56 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலை தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கினால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும் என்றும் மற்ற கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காய்கறி, மளிகை பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும், தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளியில் வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

தீவிர சோதனை

இதன் அடிப்படையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலைய மேம்பாலம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே, ஜானகிபுரம், முத்தாம்பாளையம், மாம்பழப்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், கிராம முக்கிய சாலைகள், மாவட்ட எல்லைப்பகுதிகள் என சுமார் 70 இடங்களில் பேரிகார்டுகள், மரக்கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது கட்டுப்பாடுகளை மீறியும், அத்தியாவசிய தேவையின்றியும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தேவையில்லாமல் வெளியில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினர். அதேசமயம் அத்தியாவசிய தேவைக்காக சென்றவர்களை போலீசார் அனுமதித்தனர். மாவட்டம் முழுவதும் இப்பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்