திண்டுக்கல்லில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
திண்டுக்கல்லில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஊரடங்கு விதிகளை தீவிரமாக அமல்படுத்தும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். எனவே, திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் விதிமீறலை கண்டறிய நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் 15 சுகாதார ஆய்வாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் நேற்று திண்டுக்கல் பஸ்நிலையம், மெயின்ரோடு, சன்னதிதெரு, பழனி சாலை உள்பட நகர் முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது தடையை மீறி ஒரு அழகுநிலையம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அந்த அழகு நிலையத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேபோல் ஒரு டீக்கடையில் விதியை மீறி வாடிக்கையாளர்கள் கடைக்குள் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தனர்.
இதனால் அந்த டீக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் நெருக்கமாக நின்றதற்காக மளிகை கடைகள், காய்கறி கடைகள் என 15 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு கொரோனா தடுப்பு விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மீறினால் கடைகள் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை செய்தனர்.