சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டம்

நிலக்கோட்டையில் கடைகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-11 14:07 GMT
நிலக்கோட்டை:

காய்கறிகளை கொட்டி போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகளில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தினமும் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள். 

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், கடைகளை நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்துக்கு வியாபாரிகள் சென்று, கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து காய்கறி கடைகளுக்கு வியாபாரிகள் சென்றனர்.

அதன்பிறகு கடைகளில் இருந்த காய்கறிகளை, நிலக்கோட்டை-அணைப்பட்டி சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். 

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்ைக எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதனையடுத்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், நேற்று காலை 10 மணி அளவில் வியாபாரிகளுடனான பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு தாசில்தார் சுப்பையா தலைமை தாங்கினார். நிலக்கோட்டை செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில் மதியம் 12 மணி வரை கடைகளை வைத்து கொள்ளலாம் என்றும், வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் ஒப்புக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாணி, சரவணக்குமார், வருவாய் ஆய்வாளர் சென்னா கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
---------

மேலும் செய்திகள்